Saturday, September 29, 2007

உண்மையும் நானும்..

நெருப்பினில் தோய
நேரம் வந்துவிட்டது..
உருகாமல் இங்கே கருகிவிடக்கூடும்.
உண்மை உறைப்பின் அதிரக்கூடுமோ…
அன்றி ஏளனம் செய்வாயோ
முற்ச்சொன்ன பொய்களும் புரட்டுக்களும்
பல்லிளிக்கக் கூடுமோ..
பின் எது தடுக்கிறது..
தன்மானத்திற்கும் வறட்டு கெளரவத்திற்குமான
தடுமாற்ற கணங்களில்
உண்மையும் நானும்
மௌனமாய்..

Wednesday, September 26, 2007

தந்தை

அன்றொரு மழைநாளில்
நான் நட்ட விதையொன்று
மண்பிளந்து இதழ் விரித்ததில்
மனதெங்கும் உற்சாகம் ஊற்றெடுத்தது!
தளிர்கள் வெய்யிலில் நோகுமோ,
பெருமழையில் பேச்சற்று போகுமோ,
என கண்ணும் கருத்துமாய்
காத்து வருகையிலே
தண்டொன்றில்
மொட்டொன்று
வீசக் கண்டேன்!
மொட்டவிழ்ந்து
பூவாகி விட்டதென
பூரித்த வேளையிலே
ஐயகோ!
எவர் அதைக் கொய்தது?
காம்பினில் முட்களை
மட்டும் விடுத்து!
கொய்தது கண்டால்
கொதித்தெழுமே என் சாதி!
மனிதரில் மிருககுணத்தின் மீதி!!
கொய்தவனுக்கே சொந்தமென்றது நீதி!!!
அடப்போடா,
கொய்தவனுக்கும் வேண்டாம்
இந்தக் கொடுமை.

மீண்டும் வேண்டும்

மிளகாய் கடித்து
பழையதும் பருப்புத்தொகையலும்
உண்டு களித்திருக்கிறாயா..
பனங்கொட்டை வெட்டியெடுத்து
பருப்பும் தான் ருசித்ததுண்டா..
தொண்டைக்கதிர் உருவி
பால்நெல்லை ருசித்ததுண்டா..
பனங்குருத்து வெட்டியெடுத்து
பங்குப் போட்டுத் தின்றதுண்டா..
கூட்டாஞ்சோறு ஆக்கி
கூடித்தான் களித்ததுண்டா..
கடலைச்செடி புடுங்கி
திகட்ட திகட்ட தீர்த்ததுண்டா..
புளியம்பிஞ்சோடு உப்பு
தோய்த்து புல்லரித்ததுண்டா..
அடைமழையில் உளுந்து
வறுத்து வாடை போக்கியதுண்டா..
அயிறைக்குஞ்குகளை அரைவேக்காட்டில்
ஆவிப்பறக்க ருசித்ததுண்டா..
அடப்போங்கடா நீங்களும்
உங்க மெனு கார்டும்..

மன்னித்து விடு...

மன்னித்து விடு
உன் பாசத்தின்
பரவசத்தை உணரா - இந்த
பாழாய்ப் போன இதயத்தை
மன்னித்து விடு...
மரித்துப் போவேன் என்றாலும்
மறுதலிக்கும் - இந்த
மரத்துப் போன இதயத்தை
மன்னித்து விடு...
அருகிலிருந்தாலே போதும் எனும்
ஆசைகளை அழித்தெடுத்த - இந்த
அழுகிப் போன இதயத்தை
மன்னித்து விடு...
மறுஜென்மத்தில் சந்திப்போம்
எனக்கூட கூற மறுத்த - இந்த
மரித்து போன இதயத்தை
மன்னித்து விடு...
மன்னிப்பாயா.........

நண்பா..

நண்பா!
உன்னோடு நான்
கொண்ட நெருக்கத்தை
பிரிதொருவரோடு
கொண்டிருக்கவில்லை..
மறைப்பதாய் நீ
மறுதலித்தபோது
மெளனமானேன்...
ஏன்..
எவ்விடத்தில்
நம்பிக்கை இழக்க
காரணமானேன் என
யோசித்ததால்...

சித்திரையில் என்ன வரும்!

சித்திரையில் என்ன வரும்!
பள்ளி விடுமுறை நாட்கள் தான்
ஞாபகம் வரும்!!
கோடையில் ஆறு குளம்
நீர் வற்றிப்போகஆள்துளை கிணற்றில்
ஆட்டம் போட்ட நாட்கள்..

மாமரம் ஏறி
விழுந்து காலை உடைத்துக் கொண்டு
மருத்துவமனையில் வீணாய் போன
விடுமுறை நாட்கள் ..

தேன் என்றெண்ணி
கதன்டு கூட்டை கலைத்து
துரத்தப்பட்டு ஒடிய நாட்கள்..

தேர்வு முடிவு தேதிகள்
நாட்காட்டி இதழ்களாய்
பறந்து பயமுறுத்திய இரவுகள்..

அறுவடை செய்து சேர்த்து வைத்ததை
செலவு செய்ய வரும்
திருவிழாக்களும் திருமணங்களும்
நியாபகத்தில் நிழலாடும்...

சித்திரை மீண்டும் மீண்டும் வரும்
நீண்ட விடுமுறைகள் எப்பொழுது வரும்.

நீளும் இரவுகள்...

உன் கரம் பற்றி
நடந்த வீதிகளின் வழி
மீண்டும் மீண்டும்
கடக்க எத்தனிக்கிறேன்..
கண்ணீரில் கரையும்
பிம்பம்களினால்
எட்டமுடியவில்லை
வீதியின் முடிவை...

என் தோழி

நம் நட்பு கரைந்து
எந்தப் புள்ளியில் காதலானது..
பொய்யாய் நான் கூறிய வீரபிரதாபங்களை

கேட்டு நீ அதிசயித்தயே..
அந்தப் பொழுதிலா...
கோபம் கொன்டு பேசாமல் செல்கையில் - பின்

வீதியின் முடிவில் திரும்பிப் பார்த்த
அந்தப் பொழுதிலா...
தவறு உன்னுடயதாய் இருப்பினும்

உனக்காக வாதிடும்
அந்தப் பொழுதிலா...
எவருடனோ கொண்ட கோபத்தை - என்னில்

தனித்த போது அமைதி காத்த
அந்தப் பொழுதிலா...
இருவருக்குள் ஏற்படும் கருத்து மோதலுக்கு

பின் ஏற்படும் சூன்யமான
அந்திப் பொழுதிலா...
பின் எப்பொழுது எனக் கூறுவாயா

என் தோழி....

திருமணம்

இன்று
உன்னோடு நான் கொண்ட
திருமண பந்தத்தை
முறித்துக் கொண்ட நாள்
எத்தனை ஆண்டுகள்
கடந்ததென நினைவிலில்லை..

கைம்பெண்ணாய் இருந்திருந்தால்
இச்சமூகம் சிறிதளவேனும்
அனுதாப்படிருக்கும்..
ஆனால் என் காதுகள் கேட்டதோ
ஏளனப்பேச்சுக்களும், அழைப்புகளும்..

முறிவிற்கு நானும் ஓர் காரணமோ எனக்கூறி
அடிக்கடி கூசுகிறதுஅடிமனசு..
திருமணமே வேண்டாம் எனும்
பிடிவாதத்தை இன்னும் சற்று
ஆனித்தரமாக்கியிருக்கலாமோ
என ஏங்குகிறது மனசு..

வாழ்க்கை ஓட்டத்தில்
இரணமான இதயத்தோடும்,
தூங்கா இரவுகளோடும்,
இவ்வார்த்தைகளை தூக்கியெறிய
ஆனது பல ஆண்டுகள்..
ஆயினும் விஷம் தடவி

வீசப்பட்ட வார்த்தை அம்புகள்
இன்னமும் உயிர்க்குடித்துக் கொண்டு...
காயங்கள் ஆறினாலென்ன..
தழும்புகள் துருத்திக் கொண்டு
தானே இருக்கின்றன.

சாலையும் சில குதிரைகளும்...

சாலையில் சென்று கொன்டிருந்தேன்
நடைபாதையில் கடை விரித்திருந்தான்
ஒரே ஒரு குதிரை பொம்மை மட்டுமே
எஞ்சியிருந்தது விரிப்பில்..
வாங்கும்படி வற்புறுத்தினான் இறஞ்சலாய்
வாங்கவா வேண்டாவா என
கண நேர குழப்பங்களை மீறி
கையகப்படுத்தினேன்..
சற்று தொலைவு சென்று
திரும்பிப் பார்க்கையில்
மீண்டும் ஆங்கோர் குதிரை
விரிப்பினில் முளைத்திருந்தது..
கையிலிருந்த குதிரை பொம்மை
என்னை பார்த்து சிரிப்பது போலிருந்தது...

Tuesday, September 25, 2007

மனசு

இந்த வீதியில்
எல்லா வீடுகளும் அழகு தான்!
நாளொரு வண்ணம் பூசும் வீடுகள்!!
காரை பெயர்ந்த வீடுகள்!
பூட்டப்பட்ட இருண்ட வீடுகள்!!
வெள்ளையடிக்கப்பட்ட வீடுகள்!
புதுமையை புறக்கனித்த வீடுகள்!!
வகை வகையை இருப்பினும்
ஏனோ கால்கள்
இந்த வீட்டின் வாசலில்
நின்று விடுகின்றது!
இங்கே வசிக்க முடியாமல் போனாலென்ன
வாழ்நாளெல்லாம் கடந்து செல்வேன்
இந்த வீதி வழியே...

அடிக்கள்ளி

கள்ளிச்செடி பூத்திடுச்சு!
காதல் தான் மலர்ந்திடுச்சு!!
காணாதக் கண்ணிரண்டும்
இமை மூட மறந்திடுச்சோ!!!

பேசிக்கொள்ள நினச்சதெல்லாம்
நா மறந்துப் போயிடுச்சு!
வார்த்தையெல்லாம் வாய்க்குள்ளே
வாழ்விழந்துப் போயிடுச்சோ!!

காணாது உன் தேகம்
கலையிழந்துப் போயிடுச்சு!
பாவி மக ஒடம்பினிலே
பசலை வந்துப் பாஞ்சுடுச்சோ!!

முத்தமிட முன் செல்ல
மூன்று விரல் பதிஞ்சிடுச்சு!
முன்கோபக்காரி மனசு
மூளைக்குத் தான் வெலங்கலயோ!!

பாலும் கசந்திடுச்சு!
சித்தம் தான் கலங்கிடிச்சோ!!
காதல் தான் கனிஞ்சிடிச்சு!!
கள்ளிச் செடி காய்க்கலியே!!

தேடல்...

அன்பில்லா
அழுத்தமான கைகுலுக்கல்கள்..
புன்சிரிப்பு முகமூடிகள்!
இயந்திரமோடு இயந்திரமாய்
இறுகிப் போன இதயங்கள்!!
அலுவலகம் கூட
அகம் இழந்து
அலுவல் மட்டுமே
முற்றெச்சமாய்....
தொலை தூரத்தே காணகத்தில்
காணமிசைக்கும் குயிலில்கள்..
விழி இன்றி வழி தேடி...
தொலைந்த இதயம் நாடி.....

முதுமை

வசந்த காலங்களில் வண்ண வண்ண
மலர் வீசி கனி கொடுத்த மரம்
பட்சிகள் பலவும் வந்தமர்ந்து
ஊண்டு கழித்து பரவசப்பட்ட மரம்
வெயிலில் வாடியவர்கட்கெல்லாம்
நிழல் தந்து நின்ற மரம்
இன்றோ
கேட்ப்பாரற்று நிற்க்கும் ஒற்றை மரம்
ஒற்றை மரம் மட்டுமல்ல பட்ட மரமும்
தோப்பிற்க்காகாதென
ஓதுங்க நிழல் தேடி......
வீழ்வை எதிர் நோக்கி....
அட அதென்ன
ஓரு கிளையில்
மட்டும் துளிர்கள்?

ஓ!
புல்லுருவி பாய்ந்து விட்டதோ!!!
பட்டுப்போன மரத்தோடு
பட்டும் படாமல் சில பந்தங்கள்.....

மௌனம்

உன்
நினைவு இழைகள்
ஒவ்வொன்றாய்
அறுந்து விழுந்துகொண்டிருக்க...
மீண்டும் வலுப்பெறுகிறது -
உன் வார்த்தைகள் சப்தமிடும்
மௌன இரவுகளில்.

பெயரிடப்படாதவை

எனது அகவை 65க்கும் மேல்
என்னிரு கைகள் பின்புறம் கட்டப்பட்டு
அரை நிர்வாணமாய் மண்டியிட்டிருந்தேன்
தாம்புகளின் அழுத்தத்தில்
இரத்தம் வழிவது போன்ற உணர்வு
இனி இவ்வுடலில் வழிவதற்க்கு
இரத்தமும் இல்லை கண்ணீரும் இல்லை
தூரத்தே துப்பாக்கிகள் முழங்குகின்றன..
மரணம் புதிதல்ல,
எதிர்கொள்ள அச்சமின்றி ஆவலாய்..
அயர்ச்சி, தளர்ச்சி, இயலாமை
மூன்றும் துரத்தமண்ணில் சரியத் தொடங்கினேன்…

எட்டி உதைத்ததில் விழிகள் விரிந்தன
எவனோ நின்று கொண்டிருந்தான்
வசைபாடமல் வாழ்த்த எத்தனித்தேன்
நா எழவில்லை,
கீழுதடு மட்டும் துடித்தது..
அதை அவன் கவனிக்கவில்லை
கவனித்திருந்தால்,
இங்கே கொஞ்சம் உயிர் இருக்கிறது
என்றெண்ணி உதட்டின் மேல்
எட்டி உதைத்திருக்கக் கூடும்..

வெயிலின் உக்கிரத்தை வைத்து
நேரத்தை என்னால் கணிக்க முடியவில்லை..
வெம்மையில் குளிர்ச்சியாய் முகத்தில்
ஓர் துளி நீர் பட்டுத் தெரித்தது
உடல் சிலிர்க்கவில்லை
உயிர் மட்டுமே சிலிர்த்தது
உன் ஸ்பரிசம் நினைவிலாடியது..

அதிருக்கட்டும்..,
வெட்ட வெளியில் ஆங்கோர் முதியவரை
கைகளை பிணைத்து மண்ணில்
ஏன் சரித்திருக்கிறார்கள்
அருகில் செல்லுங்கள்
அறிமுகமானவராய் இருக்கக் கூடும்…